Friday, January 16, 2009

நான் கடவுள்- தணிக்கை துறையின் விமர்சனம் ....

இந்து மதத்திற்கு எதிரான படமா?
நான் கடவுளும், சர்ச்சையும்
இளையராஜாவின் இசைக்கூடம். திரையில் ஓடிக் கொண்டிருக்கிறது நான் கடவுள். படத்தை ராஜா பார்க்க, ராஜாவின் முகத்தையே பார்த்துக் கொண்டிருக்கிறார் பாலா. டென்ஷன்...டென்ஷன்... ஒவ்வொரு விரல் நகமாக கடித்துத் துப்பிக் கொண்டிருக்கிறார் பாலா! படம் முடிந்ததும் விருட்டென்று எழுந்து தனது அறைக்குள் போய்விடுகிறார் இசைஞானி. அவ்வளவுதான், பல மணி நேரங்கள் யாரையுமே அவர் சந்திக்கவில்லை பாலா உட்பட!

மீண்டும் இசைஞானியை சந்திக்கிற வரை ஒரு பதற்றம் இருந்ததே பாலாவிடம், அதே பதற்றத்தை ரிலீஸ் நேரத்திலும் இவருக்கு கொடுக்க திட்டமிட்டிருக்கின்றன சில இந்துத்வா அமைப்புகள். "முஸ்லீம் நடிகரான ஆர்யாவை வைத்து இந்து அமைப்புகளை இழிவு படுத்தி விட்டார் பாலா. சாந்த சொரூபிகளான சாமியார்களை கஞ்சா சாமியார்களாக உருவகப்படுத்தி, அவர்களை கொலைகாரர்களாகவும் சித்தரித்திருக்கிறார். இது இந்து மதத்தையே இழிவு படுத்துகிற செயல்" இதுதான் இந்துத்வா அமைப்பை சேர்ந்தவர்களின் குற்றச்சாட்டு.

நான் கடவுள் இந்து மத கருத்துக்களுக்கு எதிரான படமா? என்ற கேள்வியோடு பாலாவை சந்திக்க முயன்றோம். கலர் கரெக்ஷன், பின்னணி இசையை மெருகூட்டுதல் போன்ற வேலைகளில் அவர் பிசியாக இருப்பதால் படத்தில் முக்கிய பணியாற்றிய சிலர் நம்மிடம் பேச முன் வந்தார்கள்.

"எழுத்தாளர் ஜெயமோகனின் 'ஏழாம் உலகம்' நாவலை தழுவி எடுக்கப்பட்ட படம் இது. பிச்சைக்காரர்களின் வாழ்க்கையை ஒரு ஆராய்ச்சி பார்வையோடு விளக்குகிற நாவல் அது. அதில் ருத்ரன் என்ற கேரக்டரை நுழைத்து ஒரு சிவ தாண்டவமே ஆடியிருக்கிறார் பாலா. ஆரம்ப காலங்களில் நாத்திகராக இருந்தாலும், சித்தர்களின் மீது மிகுந்த ஈடுபாடு கொண்டவர் பாலா. இவருக்கு பிடித்த சித்தர் ஒருவர் எழுதிய நூலின் பெயர்தான் 'நான் கடவுள்'. அதைதான் தனது படத்திற்கும் தலைப்பாக வைத்திருக்கிறார்"

"கதையையும், திரைக்கதையையும் மட்டுமே பாலா எழுதியிருக்கிறார். வசனம் ஜெயமோகனுடையது. இந்துத்வா அமைப்பை சேர்ந்தவர்கள் முதலில் ஜெயமோகன் யார் என்பதை கேட்டுத் தெரிந்து கொள்வது நல்லது. எழுத்தாளர்களின் மத்தியில் ஜெயமோகன் ஆர்எஸ்எஸ் அனுதாபி என்ற கருத்து அழுத்தமாகவே இருக்கிறது. அப்படிப்பட்டவர் எப்படி இந்து மதத்திற்கு எதிரான வசனங்களை எழுதுவார்?" என்று எதிர் கேள்வி எழுப்பினார்கள்.

"ரிக் வேதத்தில் சொல்லப்பட்டிருக்கும் வார்த்தைதான் நான் கடவுள். அது மட்டுமல்ல, ஒரு தமிழ் படத்திற்கு முதன் முதலில் சமஸ்கிருதத்தில் 'அஹம் பிரம்மாஸ்மி' என்று சப் டைட்டில் வைத்திருப்பதும் இந்த படத்தில்தான். ஒரு முழு பாடலையும் சமஸ்கிருத மந்திரத்தையே பாடலாக வைத்திருக்கிறார் இசைஞானி. அவரே பிச்சை பாத்திரம் ஏந்தி வந்தேன்... என்ற ஒரு பக்தி பாடலையும் பாடியிருக்கிறார். இவ்வளவு விஷயங்களும் படத்தை பார்த்தால்தானே தெரியும்? அப்படி பார்ப்பதற்கு முன்பே எதிர்ப்பு தெரிவித்தால் எப்படி?" என்றார்கள் ஆவேசமாகவும், வருந்தம் தோய்ந்த குரலிலும்.

படத்தை பார்த்து பிரமித்து போயிருக்கும் சென்சார் போர்டு உறுப்பினர் ஒருவரிடம் பேசினோம். "எங்க ஆர் ஓ வுக்கு தெரிஞ்சா அவ்வளவுதான்" என்ற அச்சத்தோடு பேச ஆரம்பித்தார் அவர். "நாங்க எல்லாருமே இந்த படத்தை பார்க்க ரொம்ப ஆர்வமாக இருந்தோம். இத்தனை நாட்கள் ஆன பிறகும், படம் பார்த்த பிரமிப்பு எங்களை விட்டு போகவே இல்லை. சண்டைக்காட்சிகள் மிகவும் அச்சமூட்டும் படியாக இருந்ததால் யு/ஏ சர்டிபிகேட் கொடுத்தோம். மற்றபடி எந்த காட்சிகளையும் வெட்டும்படி நிர்பந்திக்கவில்லை" என்றவர், படத்தின் கதையையும் சுருக்கமாக சொல்லி முடித்தார்.

"காஞ்சிபுரம் அருகில் குடியிருக்கும் ஒருவருக்கு ஆண் குழந்தை பிறக்கிறது. இந்த குழந்தை உங்களிடம் வளர்ந்தால் குடும்பத்திற்கு ஆகாது என்று ஜோதிடர் சொல்ல, குழந்தையை காசியில் விட்டு விட்டு வருகிறார்கள். அவன் அங்குள்ள சாமியார்களிடம் வளர ஆரம்பிக்கிறான். பாஷையிலிருந்து அனைத்து பழக்க வழக்கங்களையும் சாமியார்களிடம் கற்றுக் கொள்கிறான் சிறுவன். அவனை வாலிப வயதில் மீண்டும் சந்திக்கிறார் அவனது அப்பா. பிள்ளை இப்படி இருக்கிறானே என்ற அதிர்ச்சியில் மறுபடியும் சொந்த ஊருக்கு அழைத்து வருகிறார். இங்கு வருபவன், குழந்தைகளை கடத்தி முடமாக்கி பிச்சையெடுக்க வைக்கிற வில்லன்களுக்கு தானே கடவுளாகி தண்டனை கொடுக்கிறான். இதில் பூஜாவும் குழந்தை பருவத்தில் கடத்தி வரப்பட்டு வில்லன்களால் கண்கள் குருடாக்கப்பட்ட பெண். அவளையும் அந்த கூட்டத்திலிருந்து மீட்கிறான் என்று முடிகிறது கதை. இதில் வருகிற க்ளைமாக்சை நான் சொல்வது தர்மமில்லை" என்று முடித்துக் கொண்டார் அந்த சென்சார் போர்டு உறுப்பினர்.

மேலும் அவரது வாயை கிளறியபோது சில தகவல்கள் கிடைத்தன. நர மாமிசம் சாப்பிடுபவர்களை கொடூரி என்பார்களாம். இந்த கொடூரியாகவும் ஒரு காட்சியில் வருகிறாராம் ஆர்யா. பல்லாயிரக்கணக்கான சாமியார்கள் ஓரிடத்தில் கூடும் கும்பமேளா நிகழ்ச்சியில், எவ்வித ஆர்ப்பாட்டமும் செய்யாமல் கேமிராவோடு ஊடுருவி பல காட்சிகளை எடுத்திருக்கிறார்களாம். "இந்திய சினிமா எதிலும் இடம் பெறாத அபூர்வ காட்சிகள் அவை" என்றார் அவர்.

கடந்த மூன்று வருடங்களாக நான் கடவுளை உருவாக்கி வருகிறார் பாலா. ஆனாலும், படப்பிடிப்பு நடந்தது மொத்தம் 369 நாட்கள்தானாம். பாலா, பூஜா தவிர்த்து படத்தில் 50க்கும் மேற்பட்ட புதுமுகங்கள் நடிக்கிறார்கள். இவர்களில் பலர் நிஜமான மன நோயாளிகள். ஊடல் ஊனமுற்ற பிச்சைக்காரர்கள். இவர்களை நடிக்க வைப்பதற்கு பெரும் பிரயத்தனம் எடுத்துக் கொண்டாராம் பாலா. இதன் காரணமாகவும், பெரிய குளம் ஏரியாவில் எப்போதாவது தலை காட்டும் வெயிலாலும்தான் படப்பிடிப்பு தாமதமானது என்கிறார்கள் யூனிட்டில்.

ஒவ்வொரு நாளும் பாலாவிடம் அடி, உதை, வாங்கிக் கொண்டு ஒரு தவம் மாதிரி நான் கடவுளை முடித்துக் கொடுத்திருக்கிறார் ஆர்யா. தினமும் மூன்று வேளை தொழுகிற வழக்கம் உள்ள ஆர்யா, இவ்வளவு களேபரத்திற்கும் நடுவிலும் தனது தொழுகையை தொடர்ந்தாராம். இதற்காக அவருக்கு நேரத்தையும் ஒதுக்கிக் கொடுத்திருக்கிறார் பாலா.

"அடிப்படையில் ஒரு முஸ்லீமாக இருந்தாலும், மூன்று வருடங்களாக தாடியையும், மீசையையும் வளர்த்துக் கொண்டு, குளிரிலும், பனியிலும் நைந்து தேய்ந்துதான் ஒரு இந்து சாமியாராக வாழ்ந்து காட்டியிருக்கிறார் ஆர்யா. டீ, காபி குடிக்க வேண்டும் என்றாலும், அவர் தனது மீசை தாடியை ஒதுக்கிக் கொண்டு குடிக்கிற அவஸ்தையை பக்கத்தில் இருந்து பார்ப்பவர்களால் மட்டுமே உணர முடியும். இந்த படத்திற்காக ஆர்யா இழந்த படங்களும் ஏராளம். அப்படிப்பட்டவரை பாராட்டுவதை விட்டு விட்டு பழி சுமத்துவதை எப்படி ஏற்றுக் கொள்ள முடியும்?" என்கிறார்கள் பாலாவின் யூனிட்டில்.

படத்தின் தயாரிப்பாளரான சிவஸ்ரீ சீனிவாசனை சந்தித்தோம். "எந்த மதத்தையும் இழிவு படுத்துகிற படம் இல்லை நான் கடவுள். ஆர்யா முஸ்லீம். அவர் எப்படி இந்து சாமியாராக நடிக்கலாம்? என்று கேள்வி எழுப்புகிறவர்களுக்கு எனது பதில் இதுதான். பிரேம் நசீர் முஸ்லீம்தான். இந்து மதத்தை உயர்த்திப்பிடிக்கும் எத்தனையோ பாத்திரங்களில் அவர் நடிக்கவில்லையா? மதத்தால் முஸ்லீமான குஷ்பு, எத்தனையோ படங்களில் அம்மன் வேடத்தில் நடித்து இந்து மதத்திற்கு பெருமை சேர்க்கவில்லையா? கலைக்கு ஏது மதமும், ஜாதியும்?"

"சென்சார் அமைப்பினர் ஒரே ஒரு முறைதான் படத்தை பார்த்தார்கள். மறு தணிக்கைக்கு வரச் சொல்லவே இல்லை. மனமார எங்களுக்கு பாராட்டு தெரிவித்ததுடன், எவ்வித சிக்கலும் இல்லாமல் அனுமதி சான்றிதழ் கொடுத்திருக்கிறார்கள். இது ஒருபுறம் இருக்கட்டும். படத்தை தயாரித்த எனக்கும் மிகுந்த கடவுள் நம்பிக்கை உண்டு. யாரும் யாரையும் இழிவுபடுத்த அனுமதிக்க மாட்டேன் என்பதை ஸ்டிராங்காகவே சொல்லிக் கொள்கிறேன்" என்றார்.

சரி, முதல் பாரா சஸ்பென்சுக்கு வருவோம். இளையராஜா பாலாவிடம் என்னதான் சொன்னார்? ஒரு முழு நாள் அமைதிக்கு பிறகு அவர் சொன்னது இதுதான். "என்னாலே பேசவே முடியலே. இந்த படத்தை உலகமே கொண்டாட போவுது பாரு...!"

2 comments: