Wednesday, January 28, 2009

இந்தியா அசத்தல் வெற்றி - கம்பீர், ரெய்னா, டோணி அரைசதம்

தம்புலா: தம்புலாவில் நடந்த முதல் ஒரு நாள் போட்டியில் இந்திய அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் இலங்கையை வென்றது. கம்பீர், ரெய்னா, டோணி பொறுப்பாக பேட் செய்து அணியின் வெற்றிக்கு உதவினர்.

இந்திய கிரிக்கெட் அணி இலங்கையில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 ஒரு நாள் மற்றும் ஒரு டொன்டி-20ல் போட்டியில் விளையாட இருக்கிறது.

முதல் போட்டி தம்புலாவில் இன்று நடந்தது. கேப்டன் டோணி டாஸ் வென்றார். இதையடுத்து பீல்டிங்கை அவர் தேர்வு செய்தார். இப்போட்டியில் காயம் காரணமாக ஷேவாக் இடம் பெறவில்லை.

ஜெயசூர்யா சாதனை...

இலங்கை அணிக்கு துவக்க வீரர் வந்த ஜெயசூர்யா அதிரடியாக விளையாடி ரன்கள் குவித்தார். அவர் 37வது ரன் எடுத்த போது ஒரு நாள் போட்டிகளில் சச்சினுக்கு அடுத்து 13,000 ரன்களை கடந்த இரண்டாவது வீரர் என்ற சாதனை படைத்தார்.

மேலும் ஒரு நாள் போட்டியில் 28வது சதத்தையும் அவர் எடுத்தார். இதன்முலம் அதிக வயதில் ஒரு நாள் போட்டிகளில் சதம் அடித்த வீரர் என்ற பாய்காட்டின் சாதனைய அவர் முறியடித்தார்.

பாய்காட் 39 ஆண்டு 51 நாட்கள் என்ற வயதில் இருந்தபோது சதம் அடித்ததே இதுவரை சாதனையாக இருந்தது. இப்போது அதை ஜெயசூர்யா முறியடித்துள்ளார். அவருக்கு இப்போது வயது 39 ஆண்டுகள் 212 நாட்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

1 சிக்சர், 10 பவுண்டரிகளுடன் 107 ரன்கள் சேர்த்து ஜெயசூர்யா அவுட் ஆனார். சங்ககரா 44, மகருப் 35 ரன்கள் சேர்த்தனர். இலங்கை முதல் இன்னிங்சில் 6 விக்கெட் இழப்புக்கு 246 ரன்கள் எடுத்தது.

இந்தியத் தரப்பில் இஷாந்த் சர்மா 3 விக்கெட்களை வீழ்த்தினார். ஜாகிர்கான், ஓஜா தலா ஒரு விக்கெட்டை வீழ்த்தினர்.

தொடர்ந்து இந்தியா தனது இன்னிங்ஸைத் தொடங்கியது. தொடக்க ஆட்டக்காரர்களாக சச்சின் டெண்டுல்கரும், கம்பீரும் இறங்கினர்.

இதில் சச்சின் 5 ரன்கள் எடுத்தபோது மிராண்டா பந்தில் ஆட்டமிழந்தார். சூப்பராக விளையாடிய கம்பீர் அரைசதம் கடந்தார். இவர் 68 பந்தில் 62 ரன்கள் எடுத்து முரளிதரன் பந்தில் அவுட்டானார். 1 சிக்சர், 3 பவுண்டரி அடித்து அதிரடியாக விளையாடிய ரெய்னா 53 ரன்களுக்கு ரன்-அவுட் ஆனார்.

அடுத்து வந்த யுவராஜ் 23 ரன்களுக்கு வெளியேறினார். கேப்டன் டோணி 61, ரோகித் சர்மா 25 ரன்கள் எடுத்து, அவுட்டாகாமல் இருந்தனர்.

இந்திய அணி 48.1 ஓவரில் 4 விக்கெட் இழப்புக்கு 247 ரன்கள் எடுத்தது. இதன்மூலம் 6 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது.

அருமையாக ஆடி சதம் போட்ட ஜெயசூர்யா ஆட்ட நாயகனாக தேர்வு செய்யப்பட்டார்.

1 comment:

  1. Thanks for the score and winning details of the India vs Srilanka Cricket match....

    ReplyDelete