கிளிநொச்சியின் வீழ்ச்சி விடுதலைப் புலிகளுக்கு நிச்சயம் பெரும் பின்னடைவு என்பதில் சந்தேகம் இல்லை. இருப்பினும் அவர்களின் போர் முடிவுக்கு வருமா என்பதும் சந்தேகம்தான். காரணம், கடந்த காலங்களில் புலிகள் நடத்திய போர்கள் இதை தெளிவாக்குகிறது.
இலங்கை படைகளுக்கு எதிராக 1983ம் ஆண்டு விடுதலைப் புலிகளின் போர் தொடங்கியது. அது முதல் தொடர்ந்து பல வெற்றிகளையும், வீழ்ச்சிகளையும், பின்னடைவுகளையும் புலிகள் சந்தித்து வருகின்றனர்.
புலிகளின் தலைநகராக விளங்கியது கிளிநொச்சி என்றாலும் கூட அருகாமையில் உள்ள முல்லைத்தீவும் புலிகளின் முக்கிய தளமாக விளங்கி வருகிறது.
கிளிநொச்சிக்கு முன்பாக பரந்தன் நகரை நேற்று ராணுவம் கையகப்படுத்தியது. இதன் மூலம் வன்னிப் பகுதியில் முக்கிய தளங்களை இழந்துள்ளனர் புலிகள்.
கிட்டத்தட்ட 10 ஆண்டுகளுக்குப் பின்னர் கிளிநொச்சி ராணுவத்தின் கைவசம் வந்துள்ளது.
கடந்த செப்டம்பர் மாதம் முதலே கிளிநொச்சியைக் குறி வைத்து ராணுவம் பல முனைகளில் தனது தாக்குதலைத் தொடங்கியது. ஆனால் புலிகளின் தடுப்பரண்கள், தொடர்ந்து பெய்து வந்த மழை காரணமாக இந்த முயற்சி தடைபட்டு வந்தது.
இந்த மோதலில் ராணுவத் தரப்பில் பெருமளவில் சேதம் ஏற்பட்டது. நூற்றுக்கணக்கானோர் உயிரிழந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இருப்பினும் தற்போது தங்களது இலக்கை ராணுவம் ஒரு வழியாக எட்டியுள்ளது.
புலிகளின் தற்போதைய ஒரே முக்கிய தலமாக முல்லைத்தீவு மாறியுள்ளது. ஆனால் ராணுவத்தின் அடுத்த குறி முல்லைத்தீவுதான் என்பதால் புலிகளின் அடுத்த கட்ட நடவடிக்கை எந்த கோணத்தில் இருக்கும் என்பது கவனிப்புக்குரியதாகியுள்ளது.
ஈழப் போர் ... ஒரு பார்வை...
1948 - சிலோன் என்ற பெயரில் இருந்த இலங்கைக்கு இங்கிலாந்திடமிருந்து விடுதலை கிடைத்தது.
1956 - சிங்களத்தை ஆட்சி மொழியாக மாற்றியது இலங்கை அரசு. சிறுபான்மை தமிழர்கள் இதற்கு கடும் ஆட்சேபனை தெரிவித்தனர். இதுதான் ஈழத் தமிழர்களின் முதல் உரிமைக் குரலாகும்.
1958 - தமிழர்களுக்கு எதிராக சிங்களர்கள் இனவெறித் தாக்குதலை மேற்கொண்டனர். ஏராளமான தமிழர்கள் கொல்லபப்ட்டனர். ஆயிரக்கணக்கானோர் வீடுகளை விட்டு வெளியேறினர். சிங்களர்களுக்கும், தமிழர்களுக்கும் இடையிலான பகையுணர்வு ஆழப்பட்டது.
1972 - சிலோன் என்ற பெயர் இலங்கை என மாற்றப்பட்டது. குடியரசு நாடாக இலங்கை அறிவிக்கப்பட்டது. புத்த மதம், நாட்டின் பிரதான மதமாக அறிவிக்கப்பட்டது.
1976 - வேலுப்பிள்ளை பிரபாகரன் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தைத் தொடங்கினார்.
1983 - விடுதலைப் புலிகள் நடத்திய கொரில்லாத் தாக்குதலில் 13 ராணுவ வீரர்கள் கொல்லப்பட்டனர். கொழும்பில் தமிழர்களுக்கு எதிரான கலவரம் மூண்டது. நூற்றுக்கணக்கானோர் கொல்லப்பட்டனர். ஆயிரக்கணக்கானோர் அகதிகளாக வெளியேறினர். இதை முதல் ஈழப் போர் என புலிகள் வர்ணித்தனர்.
1987 - போர் நிறுத்தத்திற்கு முயன்ற இந்தியா, அதை அமல்படுத்த படைகளை அனுப்பியது. அமைதி ஒப்பந்தத்திற்கு புலிகள் ஒத்துக் கொண்டாலும் கூட ஆயுதங்களைக் கைவிட மறுத்து விட்டனர். இதையடுத்து இந்தியப் படைகளுக்கும், விடுதலைப் புலிகளுக்கும் இடையோ மோதல் மூண்டது. 1000க்கும் மேற்பட்ட இந்திய வீரர்கள் உயிரிழந்தனர்.
1990 - 3 ஆண்டு கால சண்டைக்குப் பின்னர் இந்தியப் படைகள் இலங்கையை விட்டு கிளம்பின. யாழ்ப்பாணத்தை கையகப்படுத்தியது புலிகள் இயக்கம். 2வது ஈழப் போர் தொடங்கியது.
1991 - விடுதலைப் புலிகளின் மனித வெடிகுண்டுத் தாக்குதலில் ராஜீவ் காந்தி கொல்லப்பட்டார்.
1993 - விடுதலைப் புலிகளின் மனித வெடிகுண்டுத் தாக்குதலுக்கு இலங்கை அதிபர் பிரேமதாசா பலியானார்.
1995 - அதிபர் சந்திரிகா குமாரதுங்கா, புலிகளுடன் போர் நிறுத்தத்திற்கு முன்வந்தார். ஆனால் கடற்படைக் கப்பலை தகர்த்தனர் புலிகள். 3வது ஈழப் போர் தொடங்கியது. ஆனால் அரசு வசம் போனது யாழ்ப்பாணம்.
1995 -2001 - வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் போர் தீவிரமடைந்தது. கொழும்பு மத்திய வங்கியில் நடந்த மனித வெடிகுண்டுத் தாக்குதலில் 100 பேர் உயிரிழந்தனர். இதில் சந்திரிகாவும் காயமடைந்தார்.
2002 - நார்வே முயற்சியால் விடுதலைப் புலிகளுக்கும், அரசுக்கும் இடையே போர் நிறுத்த ஒப்பந்தம் ஏற்பட்டது.
2003 - அமைதிப் பேச்சுக்களிலிருந்து விலகினர் புலிகள். போர் நிறுத்தம் செயலிழந்தது.
2004 - கிழக்கை தங்களது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தனர் புலிகள். அதே ஆண்டில் சுனாமி தாக்குதல் நிகழ்ந்தது. தமிழர் பகுதிகளில் பேரிழப்பு.
2005 - இலங்கை வெளியுறவு அமைச்சர் லட்சுமண் கதிர்காமல் புலிகளின் தாக்குதலில் உயிரிழந்தார். புலிகளின் கடும் எதி்ர்ப்பாளரான மகிந்தா ராஜபக்சே அதிபர் தேர்தலில் வெற்றி பெற்றார்.
2006 - ஜெனீவாவில் நடைபெற்ற அமைதிப் பேச்சுவார்த்தை தோல்வி அடைந்தது. அரசுப் படைகளுக்கும், புலிகளுக்கும் இடையே மீண்டும் போர் வெடித்தது.
2007 - கிழக்கில் உள்ள புலிகளின் முக்கிய நகரான வாகரையை ராணுவம் மீட்டது. ஜூலையில், கிழக்கு மாகாணம் முழுமையும் புலிகளின் பிடியிலிருந்து மீட்கப்பட்டதாக இலங்கை அரசு அறிவித்தது.
2008 - ஜனவரி மாதம் போர் நிறுத்த ஒப்பந்தத்தை முறித்துக் கொள்வதாக அரசு அறிவித்தது.
- ஆகஸ்ட் மாதம் வடக்கில் நான்கு பகுதிகளில் ராணுவம் முன்னேறியது. கிளிநொச்சியை நெருங்கி விட்டதாக ராணுவம் அறிவித்தது.
2009 - ஜனவரி 2ம் தேதியான இன்று கிளிநொச்சியைப் பிடித்து விட்டதாக ராணுவம் அறிவித்தது
ஒரு இனம் இன்னொரு இனத்தை அழித்து விட்டு சந்தோஷப்படுகிறது....யாருக்கு கேட்க போகிறது ஈழத்து கதறல் ......
Friday, January 2, 2009
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment